ஆயில்யம்

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் |
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது, வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோயிலாகும். தல வரலாறு: ஒரு சமயம் துர்வாச மகரிஷி, சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரை,நண்டு போல நடந்து காட்டி கேலி செய்தான். கோபம் கொண்ட துர்வாசர், அவனை நண்டாக பிறக்கும்படி சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். துர்வாசர் அறிவுரையின் படி இத்தலத்தில் நண்டு வடிவில் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றான். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையை இப்போதும் காணலாம். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர், கற்கடேஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்திரனும் தன் ஆணவம் நீங்க தன் குருவின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்தான். இங்கிருந்த புஷ்கரிணியில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து வழிபாடு செய்து திருந்தினான். இதனால் இத்தலம், திருந்துதேவன்குடி என்றழைக்கப்படுகிறது. இப்பெயரைச் சொன்னால் உள்ளூர்வாசிகளுக்கு தெரிவதில்லை. நண்டு கோயில் என்றுதான் இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். ஆயில்ய நட்சத்திர தலம்: கற்கடம் என்றால் நண்டு. கடக ராசியை சேர்ந்த ஆயில்ய நட்சத்திரத்திற்கு சிறந்த மருத்துவ குணங்கள் உண்டு. ஆயில்ய நட்சத்திரமானது ஆன்மீக ரீதியாக மனம், உள்ளத்தில் ஏற்படும் குழபங்களையும், உடலில் ஏற்படும் நோய்களையும் தீர்க்க வல்லது. ஆயில்யநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேய்பிறை, ஆயில்யம், அஷ்டமி சேரும் நாட்களில் இத்தல இறைவனுக்கு நல்லெண்ணை சாற்றி வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெருகும், உடலும் உள்ளமும் நலம் பெறும். இது தவிர அமாவாசை, செவ்வாய், சனி கிழமைகளிலும் இங்கு வழிபாடு செய்யலாம். பிற நட்சத்திரக்காரர்களும் இந்த நாட்களில் தங்களுக்கு உரிய மருந்துகளுடன் கற்கடேஸ்வரரையும், அருமருந்து நாயகியையும் அடிப்பிரதட்சணம் செய்து வழிபட்டு பின் மருந்து சாப்பிட்டு வந்தால் எந்தவித நோயிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இரட்டை அம்பிகையர் தலம்: பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு அருமருந்து நாயகி, அபூர்வநாயகி இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகிறன்றனர். இங்கு பிரதான அம்பிகையாக அபூர்வநாயகி கருதப்படுகிறாள். யோக சந்திரன்: கோயில் நுழைவுவாயில் சந்திரன் சன்னதி உள்ளது. இவர் யோக நிலையில், யோக சந்திரனாக காட்சி தருகிறார். ஜாதகத்தில் சந்திர திசை உள்ளவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி வழிபட்டால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. கோயில் அமைப்பு: இத்தலவிநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், சுதை வடிவில் நடராஜர் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது. இருப்பிடம் : கும்பகோணம் - சூரியனார்கோயில் செல்லும் வழியில் 11 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து 2 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோவில் சென்று திரும்ப கட்டணம் ரூ.40. திறக்கும் நேரம்: காலை 9 மதியம் 1.30 மணி, மாலை 4 - இரவு 7 மணி. போன்: 0435 - 2000 240, 99940 15871. |