அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்
பதில்: அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்பு உள்ள பெண்
ஒருவருக்கு மனைவியாக அமைய சம்பந்தப்பட்ட ஆணின் ஜாதகத்திலும் சில அமைப்புகள்
இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியம். களத்திரகாரகன் (சுக்கிரன்) நல்ல நிலையில்
அமைந்திருப்பதுடன், சப்தமாதிபதியும் (7ஆம் வீட்டிற்கு உரிய கிரகம்) சிறப்பாக
இருக்க வேண்டும்.
பணக்கார வீட்டுப் பெண்களுக்கு மட்டும்தான் அதிர்ஷ்டகரமான ஜாதக
அமைப்பு உள்ளது என்று சில நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறானது. பணக்கார
வீட்டில் பிறந்து, செல்வச் செழிப்பில் வளர்ந்திருந்தாலும்,
திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்ற பின்னர் அந்தக்
குடும்பத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றால்தான் அந்தப் பெண்
அதிர்ஷ்டக்கார ஜாதக அமைப்பு உடையவராக கருதப்படுவார்.
ஒரு சில பெண்கள் ஏழை வீட்டில் இருந்தாலும், நடுத்தர
குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு அந்தக் குடும்பத்தின் செல்வநிலை, கௌரவம் ஆகியவற்றை உயர்த்துவார்கள். அந்தப் பெண் வந்த நேரம்தான் அந்தக்
குடும்பம் தழைப்பதற்கு காரணமாக இருக்கும்.
செல்வ நிலையை மட்டும் வைத்து ஒரு பெண்ணுக்கு லட்சுமி கடாட்ஷம் உள்ளது
என்று கூறிவிட முடியாது. அனைத்து தரப்பினரிடமும் மரியாதையாகப் பழகும் விதம்,
கணவனின் வருமானத்திற்குள் குடும்பம் நடத்துவது, கணவரை பெரிய சங்கடங்களில் சிக்க வைக்காமல் தவிர்ப்பது போன்ற குணங்களை
ஒருகிணைந்து பெற்ற பெண்களே உண்மையில் அதிர்ஷ்டக்கார மனைவிகளாகத் திகழ்கின்றனர்.