கல்வியும், தொழிலும் பெருகட்டும்
ஆற்றலின் இருப்பிடமாக
திகழ்பவள் பராசக்தி; அவளை
வழிபட்டால் வல்லமை உண்டாகும். வலிமை உடையவனுக்கு சாதாரண புல்லும் ஆயுதம்.
அத்துடன், அவரவர்
தொழிலுக்கான கருவியே ஆயுதம். கல்விக்கு ஆயுதம், புத்தகம் மற்றும் எழுது பொருட்கள்! வியாபாரிக்கோ, தராசு, படிக்கல், கணக்கு புத்தகங்கள்.
இவ்வாறு அவரவர் தொழிலுக்கான ஆயுதங்களையே சரஸ்வதியாகக் கருதி வழிபடுவதால், சரஸ்வதி பூஜைக்கு, ஆயுதபூஜை என்ற பெயரும்
உண்டு.
புரட்டாசி மாதம்,
நவமி திதியன்று ஆயுதங்கள் முன் வைக்கப்படும் கும்பத்தில், சரஸ்வதியை ஆவாகனம் செய்து, பூஜை செய்வர். மறுநாள், விஜயதசமி முதல், அவற்றைப் பயன்படுத்த
துவங்கினால், ஆண்டு
முழுவதும் தொழில் வளம் சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.
இந்து மதத்தில் மட்டுமல்ல, புத்த மதத்திலும்,
மகா சரஸ்வதி,
வீணா சரஸ்வதி,
வஜ்ர சாரதா, ஆர்ய
சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி
என, ஐந்து
வகை வழிபாடுகள், இடம்
பெற்றுள்ளன.
மகாசரஸ்வதி, வெண்மை நிறம் கொண்டவள்; இரு கரங்களிலும் வீணை
ஏந்தி, வலது
கரத்தில் அபய முத்திரையும், இடது
கரத்தில் வெண் தாமரையும் ஏந்தியிருப்பாள். வஜ்ர வீணா சரஸ்வதி, கல்வியை வழங்குபவளாக வீணை
தாங்கியிருப்பாள். வஜ்ர சாரதா,
இடது கையில் புத்தகமும், வலது கையில் தாமரை மலரும் ஏந்திஇருப்பாள்.
ஆர்ய சரஸ்வதி வழிபாடு, நேபாளத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இவள், வலது கரத்தில் செந்தாமரை
மலரும், இடது
கரத்தில் புத்தகமும் தாங்கி இருப்பாள். வஜ்ர சரஸ்வதி, மூன்று முகங்களையும், ஆறு கரங்களையும்
கொண்டவளாக திகழ்கிறாள்.இவளின் கரங்களில் தாமரை, சுவடி, கத்தி, கபாலம், சக்கரம் மற்றும் கலசம்
இருக்கும்.
சமண சமயத்தில்,
சோடஷ வித்யாதேவி
வழிபாடு நடத்துகின்றனர். சோடஷம் என்றால், பதினாறு என்று பொருள்.
பதினாறு தேவிகளுக்கு தலைவியாக இருப்பவள் மகாசரஸ்வதி. வாக்கு எனும் சொல்லுக்கு
தலைவியாக இருப்பதால், வாக்தேவி என்ற பெயரும் இவளுக்கு
உண்டு.
சமய தத்துவங்களை,
மனித வாழ்வின் செல்வமாக கருதினர் சமண சமயத்தினர். சரஸ்வதி தேவி, சமய தத்துவங்களுக்குரிய
தெய்வமாக விளங்குவதால், இவளை, ஜின
ஐஸ்வர்யா என்று
குறிப்பிட்டனர். ஐஸ்வர்யா என்றால், செல்வம் உடையவள் என்று
பொருள். அதாவது, கல்விச்
செல்வத்தின் அதிபதி.
வேதத்தில் சரஸ்வதிக்கு வாகனமாக அன்னம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலையும், தண்ணீரையும்
கலந்து வைத்தாலும், நீரை
விட்டு விட்டு, பாலை
மட்டும் அருந்தும் அன்னத்தைப் போல, உலகில் நன்மை,
தீமை இரண்டும் கலந்திருந்தாலும், தீமையை விடுத்து, நன்மையை மட்டும் மனிதன்
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது,
இதன் தத்துவம்.
தென்னகத்தில் சரஸ்வதிக்குரிய வாகனம் மயில். இதன் தோகையில் வட்ட
வடிவில் கண்கள் இடம்பெற்றிருக்கும். படிப்பவன், இரு கண்களால் மட்டுமல்லாமல் ஆயிரமாயிரம் கண்களோடு, புதியவற்றை கற்றுத் தெளிய
வேண்டும் என்பது இதன் தத்துவம். அன்னத்தில் இருப்பவளுக்கு, ஹம்ஸ
வாஹினி என்றும், மயில் மீதிருக்கும்
சரஸ்வதிக்கு, வர்ஹ
வாஹினி என்றும்
பெயர்.
நவராத்திரியின் கடைசி நாளான நவமி திதியன்று, சரஸ்வதி பூஜை நடத்துவது
மரபு. ஆனால், அக்காலத்தில்
புரட்டாசி மாதத்தில் வரும் சரஸ்வதியின் ஜென்ம நட்சத்திரமான மூலத்தில் துவங்கி, பூராடம், உத்திராடம் மற்றும்
திருவோணம் ஆகிய நட்சத்திர நாட்களில் சரஸ்வதியை வழிபட்டனர்.
சரஸ்வதி பூஜை நன்னாளில், கல்வி வளத்திற்காகவும், தேசத்தின் தொழில் விருத்திக்காகவும் வேண்டுவோம்