உத்திரம்
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் |
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திரத்தன்றோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய உத்தமத்தலம் திருச்சி மாவட்டம் இடையாற்றுமங்கலம் மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில். தல வரலாறு : மாங்கல்ய மகரிஷி. பெயரிலேயே மாங்கல்யம் என்ற மங்கலச் சொல்லை வைத்திருக்கும் இவர் உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் தான் அகத்தியர், வசிஷ்டர், பைரவ மகரிஷி போன்ற மகரிஷிகளின் திருமணத்திற்கே மாங்கல்ய தாரண பூஜையை நிகழ்த்தி வைத்தவர். இவரது தவ வலிமை அனைத்தும் அவரது உள்ளங்கைகளில் அடங்கியுள்ளது. திருமணப்பத்திரிக்கைகளில், மாலைகளை தாங்கி வானில் பறப்பது போன்ற, அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகள் போன்ற இவைகளுக்கெல்லாம் மாங்கல்ய மகரிஷி தான் குரு. திருமணத்திற்கான சுப முகூர்த்த நேரத்தில் அமிர்த நேரம் உண்டு. இந்த நேரத்தை தக்க நேரத்தில் சூட்சுமமாக உரைக்க உதவுபவர் இந்த மாங்கல்ய மகரிஷி. இவர் தினமும் அமிர்த நேரம், சித்த யோக நேரங்களில் சூட்சும வடிவில் இத்தல மாங்கல்யேஸ்வரரை வணங்கி தனது மாங்கல்ய வரம் தரும் தியை அதிகப்படுத்துவதாக ஐதீகம். உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால்தான், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன. உத்திர நட்சத்திர தலம்: உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திரத்தன்றோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய உத்தமத்தலம் இது. தங்களது கணவன்மார்கள் நீண்ட ஆயுளடன் சிறப்பாக வாழவும், பாதங்களில் புரை நோய் உள்ளவர்களும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் பிள்ளைகளுடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்து பலனடைகிறார்கள். பிரார்த்தனை : திருமணத்திற்குரிய முக்கிய பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. குடும்ப ஒற்றுமைக்காகவும், உடலில் கால்வலி குணமாகவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. நேர்த்திக்கடன் : திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தவுடன் விரைவில் திருமணம் கூடுகிறது. திருமணம் நிச்சயம் ஆனவுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று, பின் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷியிடம் பத்திரிக்கை வைத்து எங்களது கல்யாணத்தையும் சிறப்பாக நடத்தி கொடுங்கள் என வேண்டுகின்றனர். கல்யாணம் நடந்தவுடன் தம்பதி சமேதராக வந்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர். கோயில் அமைப்பு: இத்தல இறைவன் மாங்கல்யேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.கோயில் பிரகாரத்தில் விநாயகர், மாங்கல்ய மகரிஷி, தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நந்தி, நவக்கிரகம். திருவிழா : பங்குனி உத்திரம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, திருவாதிரை, திருக்கார்த்திகை, நவராத்திரி இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்றுமங்கலத்திற்கு ஆட்டோவில் வரலாம். திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து டவுன் பஸ் வசதி உள்ளது. திறக்கும் நேரம் : காலை 8 - மதியம் 12 மணி, மாலை 6 - இரவு 8 மணி . போன் : 0 431 - 254 4070, 98439 51363 |