ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா?
பிரம்மா சத்தியலோகத்தில் ரங்கநாதப்பெருமாளை வழிபட்டு வந்தார். அப்போது பூலோகத்தை ஆண்ட சூரியகுல மன்னனான இக்ஷ்வாகு பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். மன்னனின் தவக்கனல் சத்தியலோகத்தைச் சென்றடைந்தது. நேரில் தோன்றிய பிரம்மா, வேண்டும் வரம் தருவதாக அருள்புரிந்தார். பிரம்மதேவா! உம்மால் நாள்தோறும் பூஜிக்கப்படும் பெரிய பெருமாள் சிலையை எனக்குத் தரவேண்டும்! என்று வேண்டினான். பிரம்மாவும் பள்ளி கொண்ட நிலையில் இருந்த அந்தப்பெருமாளை அவனிடம் கொடுத்தார். இக்ஷ்வாகுவின் வம்சாவழியில் வந்தவரே ராமபிரான். அவரது காலத்தில், விபீஷணர் ராமபிரானின் பட்டாபிஷேக நிகழ்ச்சியில், சூரியவம்சத்து குலதெய்வமான ரங்கநாதப்பெருமாளை பரிசாகப் பெற்றார். பிராண வாக்ருதி என்னும் விமானத்தில் பெருமாளைத் தாங்கிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து வந்தார். காவிரிநதிக்கரையில் கோயில் கொள்ள விரும்பிய பெருமாள், அவருக்கு உடல்சோர்வை ஏற்படுத்தினார். அரங்கம் என்னும் அம்மேட்டுப்பகுதியில் பெருமாளை வைத்துவிட்டு நீராடிய வீபிஷணன், மீண்டும் அவ்விக்ரஹத்தை அவ்விடத்தில் இருந்து எடுக்கமுடியவில்லை. தகவல் அறிந்த சோழமன்னன் தர்மவர்மன் அங்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டான். காலப்போக்கில் அக்கோயில் சிதிலமடைந்து காவிரி ஆற்றில் புதைந்தது. தர்மவர்மனின் மரபில்வந்த கிள்ளிவளவன் என்னும் மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கே, ஒரு மரநிழலில் இளைப்பாறினான். அம்மரத்தில் வசித்த கிளி மன்னனிடம், மன்னா! பாற்கடல் வாசனான மகாவிஷ்ணு இங்கே ரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கிறார். ஸ்ரீரங்கம் என்னும் திருத்தலம் இது என்று அரங்கநாதரின் வரலாற்றை எடுத்துச் சொன்னது. அப்போது பெருமாளே தன் இருப்பிடத்தை கிள்ளிவளவனுக்கு காட்டியருளினார்.
திருச்சி-பெயர்க்காரணம்
ஆழ்வார்களால் பாடல்பெற்ற திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். 108 திவ்யதேசங்களில் ஒன்று. கோயில், திருமலை, பெருமாள்கோயில் என்று ஒரு சொல்வழக்கு உண்டு. இதில் கோயில் என்பது ஸ்ரீரங்கத்தையும், திருமலை என்பது திருப்பதியையும், பெருமாள்கோயில் என்பது காஞ்சிபுரத்தையும் குறிக்கும். அக்காலத்தில் திருச்சிஸ்ரீரங்கநாதன்பள்ளி என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்ததால் இந்தப்பெயர் உண்டானது. இதில் ஸ்ரீ என்னும் எழுத்தை தமிழில் திரு ஆக்கிதிருச்சீரங்கநாதன்பள்ளி என்று அழைத்தனர். பின்னாளில், இப்பெயர் திருச்சிராப்பள்ளி என்றாகி, திருச்சியாக சுருங்கி விட்டது.