ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வது
சூரியன் 116.5 பாகையில் கடக ராசியில் உள்ளது. அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ஆயில்யம் 3ம் பாதம் ராசிநாதன் சந்திரன். நட்சத்திர நாதன் புதன் அம்சம் = 116.5 கழித்தல் முன் சென்ற 3 ராசிகளின் 90 பாகைகள் போக மீதி 26.5 பாகைகள். 26.5 வகுத்தல் 3.33 = 8 வது பகுதி. அதாவது கடகத்தின் 8வது பகுதி. கடகத்தின் எட்டாவது பகுதி கும்பச் சனியின் வீடு (அட்டவணையில் உள்ளது. பார்க்கவும்) சூரியன் ராசியில் தன் நட்பு வீடான கடகத்தின் வீட்டில் இருந்தாலும் அம்சத்தில் பகை வீடான சனியின் வீட்டில் உள்ளார். ஐந்தாம் வீட்டிற்குரிய சூரியன் ராசியில் அந்த வீட்டிற்கு 12ல் மறைந்துவிட்டாலும் அம்சத்தில் ஐந்தாம் வீட்டை அதன் 7ம் இடத்தில் இருந்து அற்புதமாகப் பார்ப்பதால் ராசியில் இருந்த குறை போய்விடுகிறது. அதனால் ஐந்தாம் வீட்டிற்குரிய பலன்களை எல்லாம் அவர் வழங்கிவிடுவார்.
2. சந்திரன் 46.1 பாகையில் ரிஷப ராசியில் உள்ளது. அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ரோகிணி 2ம் பாதம் ராசி நாதன் சுக்கிரன். நட்சத்திர நாதன் சந்திரன் அம்சம் = 46.1 கழித்தல் முன் சென்ற ஒரு ராசியின் 30 பாகைகள் போக மீதி 16.1 பாகைகள் 16.1 வகுத்தல் 3.33 = ரிஷபத்தின் 5வது பகுதி. சுக்கிரனின் பகுதியில் உள்ளார். (அட்டவணையில் உள்ளது) ராசியிலும் அம்சத்திலும் ஒரே வீட்டில் வலுவாக உள்ளார். அதுவும் உச்சம் பெற்றுள்ளார். இந்த ஜாதகருக்கு 4ம் வீட்டிற்கு அதிபதியான சந்திரன் உச்சம் பெற்று, 2ம் இடத்தில் அதுவும் ராசியிலும் அம்சத்திலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்று அட்டகாசமாக அமர்ந்திருப்பதால் ஜாதகருக்கு 4ம் வீட்டிற்கு உரிய பலன்களை வாரி வழங்கி உள்ளார் ஜாதகருக்கு நல்ல அன்பான தாய். அதோடு சுக ஸ்தானத்திற்கு அதிபதியும் அவரே என்பதால் ஜாதகருக்கு நல்ல வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ஜாதகர் அமெரிக்காவில் மிகவும் வசதியாக சொந்த வீடு, வாகன வசதிகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
3. செவ்வாய் 136.38 பாகையில் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கும் நட்சத்திரம் பூரம் 1ம் பாதம் அமர்ந்திருக்கும் ராசிநாதன் சூரியன். நட்சத்திர நாதன் சுக்கிரன். அம்சம் = 136.38 கழித்தல் முன் சென்ற நான்கு ராசிகளின் 120 பாகைகள் போக மீதி 16.38 பாகைகள் 16.38 வகுத்தல் 3.33 = சிம்மத்தின் 5வது பகுதி. சூரியனின் அம்சத்தில் சிம்மத்திலேயே உள்ளார். அதாவது ராசியிலும், அம்சத்திலும் ஒரே இடத்தில் வர்கோத்தமும், திரிகோணமும் பெற்றுள்ளார். மிகவும் சிறப்பான அமைப்பாகும் இது! லக்கினாதிபதிக்கு இந்த அமைப்புக் கிடைப்பதற்குத் தவம் இருந்திருக்க வேண்டும். மிகப் பெரிய வரம். வாங்கிவந்த வரம் இது! ஜாதகர் நல்ல தோற்றத்துடன், யாரையும் கவரும் விதமாகப் பொலிவுடன் இருப்பார். உண்மையைப் பேசுவார். அதுவும் அடித்துப் பேசுவார். ஆதென்டிக்காகப் பேசுவார். ஸ்டாண்டிங் பவர் உள்ளவர். உறவினர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளார். இதற்கெல்லாம் காரணம் ஜாதகத்தில் லக்கினாதிபதியின் இந்த நிலைப்பாடுதான் காரணம்.
4. புதன். 111.1 பாகையில் கடக ராசியில் 1 உள்ளது அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ஆயில்யம் 2ம் பாதம் அமர்ந்திருக்கும் கடக ராசிநாதன் சந்திரன். நட்சத்திர நாதன் புதன். அம்சம் = 111.1 கழித்தல் முன் சென்ற மூன்று ராசிகளின் 90 பாகைகள் போக மீதி 21.1 பாகைகள். 21.1 வகுத்தல் 3.33 = கடகத்தின் 7வது பகுதி. சனியின் அம்சத்தில் மகரத்தில் உள்ளார். ராசியில் பகை வீட்டில். ஆனால் அம்சத்தில் சமம் பெற்றுள்ளதைக் கவனிக்கவும் ஜாதகரின் மூன்று, ஆறு ஆகிய தீங்கிடங்களுக்கு உரியவர். ஆறாம் இடத்திற்குப் பதினொன்றில் அமர்ந்திருப்பதையும், அம்சத்தில் சமன் பெற்று இருப்பதையும் கவனியுங்கள். ஜாதகருக்கு நோய், கடன் என்று இதுவரை எந்தத் தொல்லையும் ஏற்பட்டதில்லை!
5. குரு 322.19 பாகையில் கும்ப ராசியில் உள்ளது அமர்ந்திருக்கும் நட்சத்திரம் பூரட்டாதி 1ம் பாதம் அமர்ந்திருக்கும் ராசிநாதன் சனி. நட்சத்திர நாதன் குரு (சுய நட்சத்திரம்) அம்சம் = 322.19 கழித்தல் முன் சென்ற பத்து ராசிகளின் 300 பாகைகள் போக மீதி 22.19 பாகைகள். 22.19 வகுத்தல் 3.33 = கும்பத்தின் 7வது பகுதி. செவ்வாயின் அம்சத்தில் மேஷத்தில் உள்ளார். ராசியில் இருக்கும் இடம் சம வீடு.ஆனால் அம்சத்தில் நட்பு வீடு. பாக்கிய் ஸ்தானத்திற்கு அதிபதியான குரு திரிகோணம் பெற்று லக்கினத்தில் நட்பு வீட்டில் இருப்பதைக் கவனிக்கவும். அவரே விரையத்திற்கு அதிபதியும் ஆவார். ஜாதகருக்கு ஒரு விரையம் ஏற்பட்டாலும், தன் திரிகோண அமைப்பால் அதைச் சரி செய்து விடும் வல்லமையுடன் பாக்கியாதிபதி குரு உள்ளார். லக்கினாதிபதியும், பாக்கியாதிபதியும் திரிகோண பதவி பெற்றுத் திகழ்கிறார்கள். ஜாதகத்தின் மேன்மைக்கு வேறு என்ன வேண்டும்?
6. சுக்கிரன் 93.43 பாகையில் கடக ராசியில் உள்ளது. அமர்ந்திருக்கும் நட்சத்திரம் பூசம் 1ம் பாதம் அமர்ந்திருக்கும் ராசிநாதன் சந்திரன். நட்சத்திரநாதன் சனி அம்சம் = 93.43 கழித்தல் முன் சென்ற மூன்று ராசிகளின் 90 பாகைகள் போக மீதி 3.43 பாகைகள். 3.43 வகுத்தல் 3.33 = கடகத்தின் 2வது பகுதி சூரியனின் சிம்ம வீடு. சுக்கிரனிற்கு இரண்டுமெ பகை வீடுகள்தான். பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை! இரண்டு ஏழுக்குரிய சுக்கிரன் ராசியில் நான்கிலும், அம்சத்தில் ஐந்திலும் அமர்ந்து கேந்திர ஆதிபத்யம் பெற்றதால் நல்ல கணவரையும், குடும்பவாழ்க்கையையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். அதோடு அம்சத்தில் லக்கினாதிபது செவ்வாயுடன் கூட்டணி போட்டுள்ளதால் குடும்ப வாழ்க்கையில் பல ஏற்றங்களையும் கொடுத்துள்ளான். மேலும் கொடுப்பான்.
7. சனி 80.12 பாகையில் சனி மிதுன ராசியில் உள்ளது. அமர்ந்திருக்கும் நட்சத்திரம் புனர்பூசம் 1ம் பாதம். அமர்ந்திருக்கும் ராசிநாதன் புதன். நட்சத்திர நாதன் குரு அம்சம் = 80.12 கழித்தல் முன் சென்ற இரண்டு ராசிகளின் 60 பாகைகள் போக மீதி 20.12 பாகைகள் 20.12 வகுத்தல் 3.33 = மிதுனத்தின் 7 வது பகுதி. அது செவ்வாயின் வீடான மேஷம். அட்டவணையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.ராசியில் நட்பு வீட்டில் இருக்கும் சனி அம்சத்தில் நீசமாக இருக்கிறார் (மேஷத்தில் சனி நீசமல்லவா?) என்ன பலன் சொல்வீர்கள்? 10 ஆம் இடத்திற்குரிய சனி ஆறாம் வீட்டிலும், அம்சத்தில் நீசமாகியிருந்தால் ஜாதகருக்கு வேலை எப்படிக் கிடைக்கும். ஜாதகர் படித்திருந்தும் வேலை இல்லாமல் இருக்கிறார்.( ஜாதகர் பெண்மணி. அதனால் தற்சமயம் வேலை இல்லையென்றால் பரவாயில்லை. கணவர் சம்பாத்தியம் போதாதா?) ஜாதகருக்கு குரு திசை சனி புத்தி நடைபெறுகிறது. குரு அம்சத்தில் சனியோடு சேர்ந்திருப்பதால் ஜாதகருக்குக் கூடிய விரைவில் வேலை கிடைக்கும்!)
8. ராகு 232.33 பாகைகளில் விருச்சிக ராசியில் உள்ளது. அமர்ந்திருக்கும் நட்சத்திரம் கேட்டை 2ம் பாதம். அமர்ந்திருக்கும் ராசிநாதன் செவ்வாய். நட்சத்திர நாதன் புதன். அம்சம் = 232.33 கழித்தல் முன் சென்ற ஏழு ராசிகளின் 210 பாகைகள் போக மீதி 22.33 பாகைகள் 22.33 வகுத்தல் 3.33 விருச்சிகத்தின் 7 வது பகுதி. அது சனியின் மகர அம்சம் ராசியில் உச்சம் பெற்ற ராகு, அம்சத்தில் பகையில் அமர்ந்துள்ளது. அதனால் உச்சம் பெற்ற பலனை அவரால் ஜாதகருக்கு அளிக்க முடியவில்லை! ஜாதகர் ராகு திசையில் சில ஆண்டுகள் சிரமங்களை அனுபவித்தார். அதை நான் அறிவேன்.
9 கேது 52.33 பாகைகளில் ரிஷப ராசியில் உள்ளது. அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ரோகிணி 4ம் பாதம். அமர்ந்திருக்கும் ராசிநாதன் சுக்கிரன். நட்சத்திர நாதன் சந்திரன். அம்சம் = 52.33 கழித்தல் முன் சென்ற ஒரு ராசியின் 30 பாகைகள் போக மீதி 22.33 பாகைகள் 22.33 வகுத்தல் 3.33 விருச்சிகத்தின் 7 வது பகுதி. அது சந்திரனின் அம்சம். கடகம். ராசியில் நீசம் பெற்ற கேகு, அம்சத்தில் பகையில் அமர்ந்துள்ளது. நீசத்தன்மை குறைந்துள்ளது. நாலில் உள்ள கேது அவ்வப்போது சில சுகக் கேடுகளை ஏற்படுத்தும். ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளது. (ஜாதகர் சொல்லக் கேள்வி)
10. லக்கினம். 3.12 பாகைகளில் மேஷ ராசியில் உள்ளது. அமர்ந்திருக்கும் நட்சத்திரம் அஸ்விணி 1ம் பாதம். அமர்ந்திருக்கும் ராசி நாதன் செவ்வாய். நட்சத்திர நாதன் கேது. இங்கே கழிக்கும் வேலை இல்லை. ராசியின் முதல் அம்சமான செவ்வாயின் அம்சம் ராசியும் அம்சமும் ஒரே இடம். ஆட்சி பலத்துடன், வர்கோத்தம பலனும் பெற்றுள்ளார். ஜாதகத்தின் லக்கினம் படு ஸ்திரம் (very strong) ஜாதகத்தின் மேன்மைக்கு முதன்மையான காரணம் இதுதான்!